சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம். மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தல்
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. பல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரியின் ஆய்வக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் சுமார் 500 பேர் திடீரென வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டணை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் சிவநந்தினி,
தமிழக முழுவதும் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. கல்லூரி வளாகங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பாலியல் சமத்துவ கல்வி கொண்டு வர வேண்டும்.
சி.முட்லூர் அரசு கல்லூரியில் பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக புகார் கொடுக்க முன்வந்தும் பேராசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்திதான் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.