பெங்களூரு குண்டுவெடிப்பு பாதிக்கப்பட்டவர்களிடம் முதல்வர் நலம் விசாரிப்பு
பெங்களூருவில் நேற்று பிற்பகல் பிரபலமான ராமேஸ்வரம் ஓட்டலில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்துவிட்டு மைசூரில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் ராமேஸ்வரம் ஓட்டலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்பில் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் சித்தராமையா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனை டாக்டர்களிடம் சிகிக்சை பெற்று வருபவர்களின் குறித்த தகவலையும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “இப்போது நான் சொல்வது ஆரம்ப நிலை தகவல் தான், இதை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்பது இன்னும் விசாரணையில் உள்ளது. ஒரு நபர் டோக்கனை எடுத்துக்கொண்டு பையை ஹோட்டலுக்குள் வைத்துவிட்டு சென்றார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்வோம். குற்றவாளிகளை கைது செய்ய தனி போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில், ஏன், யார் செய்தார்கள் என்பது தெரியவரும்” என்றார்.