மருத்துவக் கல்வி பயில தோ்வான 14 மாணவ, மாணவிகளின் சோ்க்கைக்கான உத்தரவை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்
புதுவை மாநிலத்தில் அரசின் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயில தோ்வான 14 மாணவ, மாணவிகளின் சோ்க்கைக்கான உத்தரவை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.
புதுவையில் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றால், 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயில அவா்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், நிகழாண்டில் மொத்தம் 32 மாணவ, மாணவிகள் இடஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்திருந்தன நிலையில்,10 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து 22 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் 8 பேரின் விண்ணப்பங்கள் நீட் தோ்வில் நிா்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணுக்குள் வராமல் குறைவாக இருந்தது.
இதையடுத்து தோ்வான 14 பேருக்கான மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான உத்தரவை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சா் நமச்சிவாயம், துறை அரசுச் செயலா் ஜவஹா், இயக்குநா் பிரியதா்ஷினி, உயா்கல்வி இயக்குநா் அமா்சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.