புதுச்சேரி சட்டபேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.. இதற்காக புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.50 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபையை தொடங்கி வைத்தார். முதலில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் ப.கண்ணன்,
வேளாண் விஞ்ஞானி எம்எஸ்.சுவாமிநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா, பங்காரு அடிகளார், பாத்திமா பீவி ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது..
இதனையடுத்து சட்ட முன்வரைவுகள் எடுத்து கொள்ளப்பட்ட போது காங்-திமுக உறுப்பினர்கள் எழுந்தனர்.
பாராளுமன்ற தேர்தல் இருந்தாலும் பல மாநிலங்களில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன.ஆனால் புதுச்சேரி அரசு தவறி இடைக்கால பட்ஜெட் தாக்கலை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என கூறி ஒட்டுமொத்த எதிர்கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து 4634கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்தார்.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாத அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். நடப்பாண்டில் அரசின் கூடுதல் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல், பொதுத்துறை நிறுவனங்களின் ஏடுகள் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன.
இதனை தொடர்ந்து காலை 10.55 மணிக்கு அலுவல்களை முடித்து சபை நடவடிக்கை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
இன்று ஒரு நாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெற்றது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் விதிகளின்படி கடந்த செப் ஒன்பதாம் தேதி சட்டமன்றம் கூடியது. அன்று ஒரு நாள் மட்டுமே சட்டமன்றம் நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதினால் மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் முடிவு செய்ய முடியாது என்பதால் அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது என்பது குறிப்பிட தக்கது.
திருபுவனை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு கார் வழங்காததை கண்டித்து அவர் இரு சக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்தார். தனக்கு வழங்கப்பட்ட பழைய கார் பழுதடைந்து விட்டதால் புதிய கார் கேட்டு கொடுக்கவில்லை என முதலமைச்சர் மீது குற்றம்சாட்டினார்.
புதுச்சேரியில் உள்ள 32 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார் வழங்கப்பட்ட நிலையில் தனக்கு புதிய கார் வழங்காததை கண்டித்து அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்ததாக அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அனுமதிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் அவை துவங்குவதற்கு முன் முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பட்டு அங்கவஸ்திரத்தை அணிவித்து காலில் விழுந்து கோரிக்கை வைத்தார்..