பழனி பஸ்நிலையத்தில் கேரள பயணிகளுக்கும் பஸ் கண்டக்டருக்கும் இடையே கைகலப்பு
பழனி பஸ்நிலையத்தில் கேரள பயணிகளுக்கும் பஸ் கண்டக்டருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த கைலாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவிலுக்கு வந்தார்.
கோவிலில் முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கொடைக்கானல் செல்வதற்காக பழனி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
இதற்கிடையே கொடைக்கானல் செல்லும் TN 57 N 1858 பஸ் நிலையத்தில் வந்தது. இதையடுத்து கைலாஷ் தனது குடும்பத்துடன் பஸ்சில் ஏறி முன் பகுதியில் அமர சென்றதாக தெரிகிறது.
அப்போது பஸ்ஸின் கண்டக்டர் கைலாஷ் குடும்பத்தினரை பின்பகுதியில் அமருமாறு கூறியுள்ளார். இதனால் கைலாஷ் குடும்பத்தினருக்கும் பஸ் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அதைத்தொடர்ந்து இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் கேரள பக்தர் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் கைலாஷ் குடும்பத்தின் சார்பில் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கேரளா பக்தர் மற்றும் நடத்துனர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.