கல்லூரி மாணவ மாணவியர்கள் கூடுதல் பேருந்து இயக்க கோரி சாலை மறியலில்
ராஜபாளையம் அருகே சென்னாகுளம் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மற்றும் அரசு பேருந்து பணிமனை அதிகாரிகளை கண்டித்து திடீரென காந்தி சிலை ரவுண்டானாவில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சென்னாகுளம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வரும் நிலையில் ராஜபாளையம் பகுதியில் இருந்து முகவூர், தளவாய்புரம், சேத்தூர் ஆகிய பகுதியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கல்லூரி செல்ல அரசு சார்பில் ராஜபாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தினசரி ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதனால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிப்பதோடு படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணம் செய்வதாகவும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அரசு பேருந்து அதிகாரிகள் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் அரசு பேருந்து உரிய நேரத்தில் இல்லாத காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ. மாணவியர்கள் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அரசு பேருந்து பணிமனை அதிகாரிகள் கல்லூரி மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நேரத்தில் அரசு பேருந்து இயக்கப்படும் என அரசு அதிகாரிகள் கூறியதால் மாணவ மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.