பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவதூறாக பேசியதாக புகார். சிதம்பரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி. 100க்கும் மேற்பட்டோர் கைது. தனியார் பேருந்து கண்ணாடியை பாமக தொண்டர் உடைத்ததால் பரபரப்பு.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை குறைவான வகையில் பேசியதாக பாமக குற்றம் சாட்டியது. இந்நிலையில் பாமக சார்பில் இன்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பாமகவினர் மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே ஒன்று திரண்டனர். இதனால் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக திரண்டிருந்த 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடியே கைதாகி பேருந்துகளில் ஏறினர். இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த நெய்வேலியை சேர்ந்த பாமக தொண்டர் வினோத் என்பவர் சிதம்பரம் பஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த தனியார் பேருந்து ஒன்றின் கண்ணாடியை அடித்து உடைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்த பாமக தொண்டர் வினோத்தை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் இதனால் சிதம்பரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.