பேருந்துகளில் ஜாதிய பாடல்களை ஒலிக்க செய்தால் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு
நெல்லை மாநகரின் பேருந்துகளில் ஜாதிய பாடல்களை ஒலிக்க செய்தால் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை, தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களிடையே அவ்வபோது மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜாதிய ரீதியிலான மோதல் மற்றும் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொள்வது என்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
பேருந்து நிலையங்கள் பேருந்துகள் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர காவல் துறை சார்பாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாநகர காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாணவர்களிடையே நடைபெறும் மோதல் குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துவது போன்ற சந்தேகம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஜாதிய ரீதியிலான மோதல் தடுக்கும் வகையிலும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மாநகரப் பகுதிகளில் பேருந்துகளில் ஜாதி ரீதியிலான பாடல்களை ஒலிக்க கூடாது என்றும், அது போன்ற பாடல்கள் பென்ட்ரைவ், டிவிடி ஆகியவற்றில் இருந்தால் அழித்துவிட்ட வேண்டும் மீறி ஜாதிய ரீதியான பாடல்கள் ஒலிக்க செய்தால் ஒட்டுநர், நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.