அச்சரப்பாக்கத்தில் இருந்து ஆனைக்குன்றம் வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் இருந்து ஆனைக்குன்றம் வரை நெடுஞ்சாலையின் இரு பக்கமும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கால்வாய் பணி மேற்கொள்வதற்காக நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை இணைந்து மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்காக சாலையின் இருபக்கமும் வருவாய்த்துறையினரை அளவீடு செய்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் இருந்து சாலையின் இரு பக்கமும் சரியான முறையில் வருவாய்த் துறையினர் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பள்ளிப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர்நகர் பகுதியில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இன்று அச்சரப்பாக்கம் எலப்பாக்கம் கூட்டு சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் உதவி பொறியாளர் அலுவலகத்தை கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்த 100 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு வருவாய்த்துறையினர் சரியாக அளவீடு செய்யவில்லை என கோரிக்கையை எழுப்பி மீண்டும் சாலையின் இரு பக்கமும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன்பின்னர், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன்,வருவாய் ஆய்வாளர் மோகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.