தொடரும் கன மழை 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கன மழை 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது இன்று காலை துவங்கி மயிலாடுதுறை திருவெண்காடு சீர்காழி மேலையூர், வைத்தீஸ்வரன் கோயில் செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கன மழை காரணமாக வாய்க்கால்களில் தண்ணீர் அதிக அளவு வடிந்து வரும் நிலையில், வாய்க்காலும் வயலும் ஒரே மட்டத்தில் காணப்படுகின்றது. தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் வயல்களில் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது இதனால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கத் துவங்கி உள்ளன.
நெய்தவாசல் தர்மகுளம், திருவெண்காடு, குளிச்சாறு, மேலாநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டமடையும் சூழல் உருவாகியுள்ளது. வடிகால் வாய்க்கால்களை சீரமைத்து வெள்ள நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.