கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு அதிர்ச்சி தகவல்
கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்தது. கடந்த 2019ல் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இரண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்டது.
இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் இந்த தடுப்பூசி தான் கொரோனா தடுப்பூசியாக போடப்பட்டது. இதில் குறிப்பாக இந்தியாவில் சுமார் 174.94 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
அதாவது கோவிஷீல்டு தடுப்பூசியால் இறப்புகள் மற்றும் உள்உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுவதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் ஏற்பட்டதாக 51 வழக்குகள் விசாரணையில் உள்ளன என கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு (TTS – Thrombosis with Thrombocytopenia Syndrome) மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையை குறைத்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.