சிதம்பரத்தில் அதிமுக கள ஆய்வு கூட்டம். முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சிவி. சண்முகம் எம்பி பங்கேற்பு. திமுக ஆட்சியில் நடக்கும் ஜனநாயக விரோத செயல்கள், அடக்குமுறைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என நிர்வாகிகளிடம் கூறி இருக்கிறோம் என டி.ஜெயக்குமார் பேட்டி. திமுக ஆட்சி மக்களிடையே நம்பிக்கை இழந்த அரசாக இருப்பதால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் எனவும் பேட்டி
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுகவின் அனைத்து நிலை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடந்தது. இதில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி. சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்ட முன்னாள் அமைச்சர்கள், பின்னர் உரையாற்றினர். அதிமுகவின் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
பின்னர் கூட்டம் முடிந்ததும் புறப்பட்ட முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
கழக பொதுச் செயலாளர் உத்தரவிற்கு இணங்க கள ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கடலூர் மாவட்டத்திலும், சிதம்பரத்திலும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. எதிர்வரும் 2026ல் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலில் களப்பணியை எப்படி ஆற்ற வேண்டும் என்பது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
திமுக ஆட்சியில் நடக்கும் அடக்குமுறைகள், ஜனநாயக விரோத செயல்கள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஆகியோரை கொண்டு உள் அரங்க கூட்டமாக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. கழகத் தோழர்களுக்கு பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சில வார்த்தைகள் சொல்லப்படுவதுண்டு.
இந்த திமுக ஆட்சி மக்களிடையே நம்பிக்கை இழந்த ஒரு அரசாக இருக்கிறது. இந்த ஆட்சி மீது கடும் அதிருப்தி இருக்கிறது. இன்னும் 18 மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. 2026 தேர்தலில் மீண்டும் திமுக கண்டிப்பாக ஆட்சிக்கு வராது. ஒருமுறை ஆட்சியில் இருந்து மீண்டும் ஆட்சிக்கு வராது. முதல்வராக இருந்த அம்மாதான் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அதிமுகவுக்கு மட்டுமே அந்த வரலாறு இருக்கிறது.
தற்போது ஒரு நல்ல சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வருகின்ற 2026-ல் மீண்டும் எடப்பாடி தலைமையில் அம்மா அரசு அமையும் என்றார். கள ஆய்வு கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் பணம் கேட்கிறார்கள் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
உள் அரங்க கூட்டத்தில் பேசியது. அவர் அப்படி பேசியிருக்க மாட்டார். வெளியில் வந்து பேசினால் கருத்து சொல்லலாம் என மழுப்பலாக கூறிவிட்டு சென்று விட்டார்.