குளத்தில் செத்து மிதந்த மீன்கள் நோய் தொற்று அபாயம்
காரைக்கால் நிரவி கிராமத்தின் குளத்தில் செத்து மிதந்த மீன்கள். துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்று அபாயம். மர்ம நபர்கள் விஷம் கலந்ததாக பொது மக்கள் புகார்.
காரைக்கால் மாவட்டத்திலுள்ள நிரவியை அடுத்துள்ள பூசை மண்டபம் என்னும் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளை சுற்றி நடுவில் குளம் அமைந்துள்ளது. மூன்று தலைமுறைகளாக உள்ள இக்குளத்துநீரை மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர்.
காலப்போக்கில் முழுமையாக பராமரிப்பு இல்லாததால் குளிப்பதற்கும் கால்நடைகளை பராமரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திடீரென்று குளம் சாக்கடை போல் நிறம் மாறி அதிலிருந்து மீன்கள் செத்து மிதந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராம மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது குளம் முழுவதும் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு மற்றும் பெரியோர்களுக்கு அரிப்பு ஏற்பட்டு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் துர்நாற்றம் கடுமையாக வீசி வருவதால் முகத்தைப் மறைத்து வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் இதனால் ஊர் பஞ்சாயத்தர்கள் சொந்த செலவில் நீர் மோட்டார் வைத்து தற்போது தரிசி நிலங்களில் அந்த நீரை வெளியேற்றி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் இந்த குளத்தை முழுமையாக தூர்வாரி வடிகால் அமைத்து பராமரிக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.