டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.
அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை சென்ற நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சம்மனுக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாக தகவல் வெளியானது. மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக இன்றிரவு விசாரிக்க கோரி ஜெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.