திரிசங்கு சிக்கலில் தேமுதிக
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், வரும் நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை உறுதி செய்த நிலையில், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
மறுபக்கம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணி அமைக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக இன்னும் அதன் கூட்டணியை உறுதி செய்யாமல் இருந்து வருகிறது. கூட்டணி தொடர்பாக அதிமுக தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், அதிமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தற்போது நிலைப்பாட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அதிமுக மறுத்து வருவதாகவும், இதனால் கூட்டணி குறித்து அதிமுகாவுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்தி கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.
இதனிடையே, சாலிகிராமம் இல்லம் சென்று பிரேமலதா விஜயகாந்தை பாஜக மேலிட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்களவை தேர்தல் கூட்டணியில் அதிமுகவை தேமுதிக கழற்றிவிடுகிறதா? என கேள்வி எழுந்துள்ளது.