தொண்டருக்கு ‘ பளார் ‘ விட்ட கர்நாடக துணை முதல்வர்
கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தனது தோள் மீது கைபோட்டதற்காக தொண்டர் ஒருவரை அடித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகா துணை முதலமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவக்குமார் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று ஹாவேரியில் உள்ள சவனூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவரை சிவக்குமார் அறைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக, வாக்கு சேகரிப்பதற்காக சிவக்குமார் ஹாவேரி வந்திருந்தார். அவரை வரவேற்கும் விதமாக சாலையின் இரண்டுபுறமும், ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்திருந்து, டிகே டிகே என முழக்கமிட்டனர்.
அப்போது தனது காரில் இருந்து இறங்கி சில அடிகள் நடந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த மஞ்சள் சட்டை அணிந்திருந்த நபர் சிவக்குமாரின் தோளின் மீது கையை போட்டு, எதிரில் இருந்த நபரிடம் புகைப்படம் எடுக்குமாறு சைகை காட்டினர். இதனை சற்றும் எதிர்பாராத சிவக்குமார் எரிச்சலடைந்து, தொண்டரை அறைந்து விலகி செல்லுமாறு எச்சரித்தார்.
இதனால் அந்த நபர் அதிர்ச்சியடைய, அடனே அங்கு இருந்த காவலர்கள் மற்றும் தொண்டர்கள் அடிவாங்கிய நபரை அங்கிருந்து கூட்டத்திற்குள் தள்ளிவிட்டனர். டி.கே. சிவக்குமரால் தாக்கப்பட்ட அலாவுதீன் மணியார் என்பவர், சாவனூர் பேரூராட்சி உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது. கட்சி தலைவரால் தாக்கப்பட்ட பிறகும் கூட அவர் மீண்டும், பேரணியில் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.