கடும் நிதி நெருக்கடியிலும் தமிழக அரசு இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில்வே திட்டத்திற்கு 22 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது, இதில் மத்திய அரசின் பங்கு என்பது சீரோ, தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது என நெல்லையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை.வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை. வைகோ நெல்லை சந்திப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்
இலங்கையில் புதிய அதிபராக அனுராகுமார திசநாயகே பதவியேற்றுள்ளார். இவர் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர், ஆனால்
அவர் பதவியேற்ற பிறகு இன, மதங்களுக்கு அப்பாற்பட்டு தனது ஆட்சி இருக்கும் என ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார்.. அவருக்கு எங்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈழ தமிழர்களுக்கான அடிப்படை உரிமையை பெற்று தரவேண்டும். புதிய அதிபர் இளைஞர் பழம்பெரும் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு வந்துள்ளார், எனவே இவரின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும்,
சமக்கரா சிக்ஷான் அபியான் திட்டத்தில் கடந்த ஆண்டுக்கான நிதி 249 கோடி ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 500 கோடி ரூபாய் நிதி வரவேண்டும் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் பள்ளி கல்விதுறையில் முதலிடத்தில் உள்ளது..
தமிழக இளைஞர்கள் உலகம் முழுவதும் வலம் வருகிறார்கள் என்றால் அது தமிழகத்தின் இரு மொழி கொள்கையினால் தான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தரப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறுகிறார். மும்மொழிக்கொள்கை மூலம் அவர்கள் ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கின்றனர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னை மெட்ரோ திட்டத்திற்கு முதல் திட்டத்திற்கு நிதி தந்ததில் ஒன்றிய அரசின் பங்கு உள்ளது.
ஆனால் மெட்ரோ 2ம் திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி நிதி வரவேண்டும் அந்த நிதி ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முதல் கட்டத்திற்குதான் நிதி வழங்கப்படும் 2- கட்டத்திற்கு நிதி எந்த மாநிலத்திற்கும் வழங்கவில்லை என்கிறார் ஆனால் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது, தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும் மெட்ரோ திட்டம் இரண்டிற்காக 22 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் நிதி சீரோவில் உள்ளது, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதை காட்டுகிறது என தெரிவித்தார்.