தருமபுரம் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில், மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், திருவெண்காடு சம்பா கட்டளையைச் சேர்ந்த விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ், ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கில் தொடர்புடைய செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தருமபுரம் ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்படாததால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.
ஆதீனத்தில் நேர்முக உதவியாளர் செந்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் 90 நாட்கள் சிறையில் இருந்ததை தொடர்ந்து நிபந்தனை ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2-வது நபரான தலைமறைவாக இருந்த தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் முதல்முறையாக முன்ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்றுமுன்தினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாயகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்படாததால் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யமுடியவில்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது இதன் காரணமாக செந்திலின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தனிப்படை காவல்துறை உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் வாரணாசியில் தங்கி இருந்த செந்திலை நேற்று காலை கைது செய்தனர் தொடர்ந்து அவரை விமானம் மூலம் பெங்களூரு அழைத்து வந்தனர் அங்கிருந்து அவர் காவல்துறை வாகனம் மூலம் மயிலாடுதுறை கொண்டுவரப்பட்டார்.
காவல் நிலையத்தில் தயார் செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்து பெற்ற பின்னர், மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் தொடர்ந்து செந்திலை நீதிபதிகள் குடியிருப்பில், நீதித்துறை நடுவர் நீதிபதி கலைவாணி முன்பு நள்ளிரவில் ஆஜர் படுத்தினர்.
தொடர்ந்து அவரை 26 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆதீனத்தின் முன்னாள் உதவியாளர் செந்தில் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.