மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சோதனைச் சாவடி அலுவலர்கள் பணிகள் குறித்து உரிய அறிவுரை வழங்கினார்
புதுச்சேரில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கணபதி செட்டிக்குளம், சிவாஜி சிலை, ஐய்யங்குட்டிப்பாளையம், கோரிமேடு, பத்துக்கண்ணு மற்றும் திருக்கானூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன், இரவு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த வாகன சோதனைப் பதிவேட்டை பார்வையிட்டு, சோதனைச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை, பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் தொடர் ஆய்வுகளின் விபரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் சோதனைச் சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகளையும் வழங்கினார்.