திமுக பிரமுகர் ஆராமுதன் வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிட்டார்
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராவமுதன். இவர் திமுக காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார். அதற்கு முன்னதாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் ஆராவமுதன் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் மேம்பாலம் அருகில் படப்பை செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய பேருந்து நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக அவரது காரில் இரவு வந்துள்ளார்.
அப்போது அதிவேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத 4 நபர்கள் ஆராவமுதன் வந்த காரின் மீது நாட்டு வெடி குண்டை வீசி தாக்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஆராவமுதனை, அடையாளம் தெரியாத கும்பல் சுற்றி வளைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில் திமுக பிரமுகர் ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கனகராஜ், அருண்ராஜ், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய 4 பேர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் – 2 ல் இன்று சரணடைந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் கண்ணா நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நான்கு பேரையும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.