லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் திமுக ரூ.509 கோடி CSKவிடம் அதிமுக ரூ. 4 கோடி
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகளை பெற்றது என்பது தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஒருநாள் முன்னதாகவே, தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்தது. ஆனால் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்க வில்லை. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் மீண்டும் வழங்கிய உத்தரவின்படி எஸ்பிஐ வங்கி வழங்கிய புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக மொத்தமாக ரூ.656.5 கோடி பெற்றுள்ள நிலையில் லாட்டரி மார்ட்டின் நிறுவனம் மட்டும் ரூ.509 கோடியை வழங்கியுள்ளது. இதேபோல் அதிமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6 கோடி பெற்றுள்ளது. இவற்றில் ரூ.4 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் அளித்துள்ளது புதிய விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் புதிய தரவுகளின்படி, தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக மொத்தமாக ரூ.6,986.5 கோடியை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ. 1334 கோடியும், பிஜு ஜனதா தளம் ரூ.944.5 கோடியும் பெற்றுள்ளது, அதே போல ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.442.8 கோடியும், தெலுங்கு தேசம் கட்சி 181.35 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1397 கோடியும், பிஆர்எஸ் கட்சி ரூ.1322 கோடியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.