டக் அவுட் எத்தனை வகை இருக்கு தெரியுமா?
கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது அதனை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
கிரிக்கெட் போட்டியில் டக் அவுட் (Duck-Out) என்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். அதாவது ஒரு ஒரு பேட்ஸ்மேன் ரன் எதுவும் எடுக்காமல் 0 ரன்களில் ஆட்டம் இழந்தால் அதை நாம் டக் அவுட் என்று சொல்வோம். ஆனால் இந்த கிரிக்கெட் போட்டியில் நமக்குத் தெரிந்து கோல்டன் டக்-அவுட் (Golden Duck Out), சில்வர் டக்-அவுட் (Silver Duck Out) என இரு பெயர்கள் தெரிந்திருக்கலாம்.
ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் இதைத் தாண்டி பல டக் அவுட் உள்ளது அதைப்பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். ஒரு பேட்ஸ்மேன் தான் விளையாடும் முதல் பந்திலேயே ரன்ஸ் எடுக்காமல் டக்-அவுட் ஆனால் அதை கோல்டன் டக் என்று அழைப்பார்கள். அதே நேரம் ஒரு பேட்ஸ்மேன் ரன் எதுவும் எடுக்காமல் தனது 2-வது பந்தில் டக் அவுட் ஆனால் அதை சில்வர் டக் (Silver Duck) என்று கூறுவார்கள். அதே போல ஒரு பேட்ஸ்மேன் ரன்களை எடுக்காமல் 3-வது பந்தில் அவுட் ஆனால் அது ப்ரான்ஸ் டக் (Bronze Duck) என்பார்கள்.
இதை போல டைமண்ட் டக் என்றால் ஒரு பேட்ஸ்மேன் ஒரு சரியான பந்தை கூட சந்திக்காமல், ரன் எடுக்க ஓடும் போது அவுட் ஆனாலோ அல்லது ஒரு சரியான பந்தை கூட சந்திக்காமல் பீல்டர்களுக்கு தடங்கல் ஏற்படுத்தி அவுட் ஆனாலோ அதாவது தெளிவாக சொன்னால் 0(0) என்று அவுட் ஆனால் அதுதான் டைமண்ட் டக் (Diamond Duck) என்று கிரிக்கெட்டில் அழைப்பார்கள்.
இதே போல சற்று மாறுபட்டது தான் டைட்டேனியம் டக் (Titanium Duck), இது ஒரு நான்-ஸ்ட்ரைக்கர் அதாவது எதிர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் ஒரு பந்தை கூட சந்திக்காமல், விளையாடி கொண்டிருக்கும் பேட்ஸ்மேன் செய்த தவறால் 0(0) என்று ரன் அவுட் ஆனால் அதுதான் டைட்டானியம் டக். மேலும், ஒரு பேட்ஸ்மேன் இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் போது ஒரு ஆட்டத்தின் முதல் பந்தில் அவுட் ஆனால் அது ராயல் டக் (Royal Duck).
அதே போல ஒரு பேட்ஸ்மேன் களமிறங்கி ரன்கள் எதுவும் எடுக்காமல் 0 அவுட் ஆகி அந்த இன்னிங்ஸ்ஸே முடிவடைந்தால் அதுதான் லாஃபிங் டக் (Laughing Duck). இந்த லாஃபிங் டக் என்பது பெரும்பாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக நடக்கும். அல்லது சில நேரங்களில் ஒருநாள் போட்டிகளிலும் நடக்கும். இப்படி பலவித டக் அவுட்கள், பல பெயர்களில் இந்த கிரிக்கெட் போட்டியில் இருந்து வருகிறது.