திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில், திருச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, பொதுச்செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில், இண்டியா கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. ஒருங்கிணைப்பு இல்லாத போது, எப்படி ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த கூட்டணியில், இதுவரை பிரதமர் வேட்பாளர் யார்? என்று சொல்லவே இல்லை.
டில்லியில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் காங்கிரஸுடன் போட்டி களத்தில் உள்ளது. கேரள மாநில லோக்சபா தொகுதியில், ராகுலை எதிர்த்து, இண்டியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரே வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். இந்தக் கூட்டணி எப்படி ஒருங்கிணைந்து, வெற்றி பெற்று, ஆட்சிக்கு வர முடியும்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எங்கு போய் சேர்ந்தாலும், அங்கு ஏழரை பிடித்து விடும்; அவ்வளவு ராசியானவர். இவர், சேராமல் இருந்திருந்தால், இண்டியா கூட்டணி பலமாக இருந்திருக்கும். இவர் சேர்ந்ததன் விளைவாக, காரில் டயர்கள் கழன்று செல்வது போல், ஒவ்வொரு கட்சியாக கழன்று போய் விட்டதால், பெயரளவுக்கு இண்டியா கூட்டணி இருக்கிறது.
தமிழக மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்ட ஸ்டாலின், இண்டியா கூட்டணி என்ற போர்வையில் தேர்தலை சந்திக்கிறார். அந்தப் போர்வை இல்லை என்றால், லோக்சபா தேர்தலில் ஸ்டாலின், டெபாசிட் கூட வாங்க மாட்டார். இண்டியா கூட்டணியை முன்னிறுத்தி மக்களிடம் ஓட்டுக்களை பெறுவதற்கு, தந்திரம் செய்கிறார். பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய அனுபவத்தின் அடிப்படையில, கள்ளக் கூட்டணி என்றும் கள்ளத்தொடர்பு என்றும் கூறி வருகிறார். மனதில் உள்ளது தான் வெளியில் வருகிறது. அவர்களுக்குள் வேண்டுமானால், அப்படி ஒரு எண்ணம் இருக்கலாம். பழக்க தோஷம் காரணமாக என்னை வைத்து, கள்ளத்தொடர்பு என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆட்சி, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்றால் பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்திருப்போம். எங்களுக்கு ஓட்டு போடும் மக்கள் தான் முக்கியம். மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,யின் மூலமாக, மக்கள் குரலை பார்லிமெண்டில் ஒலிப்பது தான் எங்கள் லட்சியம். குடும்ப உறுப்பினர்களை ஆட்சி, அதிகாரத்திற்கு கொண்டு வந்து கொள்ளையடிப்பது, எங்கள் லட்சியம் அல்ல.
ஜனநாயக கட்சியான அ.தி.மு.க.,வில் மக்களுக்கு உழைக்க வேண்டும், என்ற பாடத்தை எம.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கற்றுக் கொடுத்துள்ளனர். தி.மு.க.,வை போல் கார்ப்பரேட் கம்பெனி அல்ல. சில எட்டப்பர்கள், தி.மு.கவுடன் சேர்ந்து சின்னத்தை முடக்க வேண்டும், என்று முயற்சி செய்தனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தலைவர்கள், தெய்வங்களாக இருப்பதால், தீய சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது.
பா.ஜ., கூட்டணியில் இருந்த போதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் மொத்தம் 14 ஆண்டுகள், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க., தமிழக மக்களுக்கு என்ன செய்தது? என்று மக்கள் கேள்வி கேட்கக் துவங்கி விட்டனர். மக்களுக்கு எந்த திட்டங்களையும் கொண்டு வராமல், ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொள்ளையடிக்க வேண்டும், என்று திட்டமிடும் கட்சி தி.மு.க.,தி.மு.க., முதல்வரும், அமைச்சர் உதயநிதியும் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில், மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் காட்சியை பார்க்க முடிகிறது. மூன்று ஆண்டு கால ஆட்சியில், மக்கள் மீது மூன்றரை லட்சம் கோடி கடன் சுமையை சுமத்தி இருக்கிறீர்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்தால், பல லட்சம் கோடிகளை கொள்ளையடிக்கலாம், என்பது ஸ்டாலின் கனவு. அது பகல் கனவு.
அ.தி.மு.க., ஆட்சியில், 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள், 6 சட்டக் கல்லுாரிகள் அமைத்து சாதனை மேல் சாதனை படைக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சியில், 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. பணப்புழக்கம் இல்லாமல், மக்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏழை எளியோர் மற்றும் மாணவ, மாணவிய ருக்கான திட்டங்களை நிறுத்தி, தமிழகத்தை சீரழித்து விட்டது தி.மு.க., அரசு. உங்களுக்கு துரோகம் நினைத்தவர்களுக்கு, இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது போல், அ.தி.மு.க., ஆட்சியில் என்னென்ன சீரழிவுகள் நிகழ்ந்தன, என்று சொன்னால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். முதல்வர் பொறுப்பில் இருப்பவர் ஆதாரத்துடன் பேச வேண்டும், என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க., மீது வீண் வழி சுமத்தி பின்னுக்கு தள்ளி விடலாம் என்று நினைக்காதீர்கள்.
எதையும் சிந்தித்து செயல்படக் கூடிய அறிவுபூர்வமான தமிழக மக்கள், எதையும் எடை போட்டு தீர்ப்பளிக்கக் கூடியவர்கள். வரும் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று மக்கள் தெளிவு பெற்று விட்டனர்.இவ்வாறு, அவர் பேசினார்.