தமிழகத்தில் உள் இட ஒதுக்கீடு மூலம் பட்டியல் இனத்தவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதால் அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியர் சமூகத்தினருக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இந்த உள் இட ஒதுக்கீடு மூலம் ஒட்டுமொத்த பட்டியல் சமூகத்தினருக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் உள்பட பல்வேறு சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தனியான இட ஒதுக்கீடாகத்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அருந்ததியர் சமூகத்தினருக்கு மட்டும் பட்டியல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடான 18 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் பிரிக்கப்பட்டு உள் இட ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. இதனால் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு சலுகை முழுவதும் அருந்ததியர் சமூகத்துக்கு மட்டுமே செல்கிறது.
மேலும் பல்கலைக்கழகங்கள், அரசுக்கல்லூரிகள் என அரசுத்துறைகளில் காலியாக உள்ள பட்டியல் சமூக ஒதுக்கீடு பணிகள் அனைத்திலும் அருந்ததியர் சமூகத்தினர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உள் இட ஒதுக்கீடு மூலம் பிற பட்டியல் சமூகத்தினர் வேலை வாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பட்டியல் சமூகத்தினருக்கான மிகப்பெரிய சமூக அநீதியாக உள்ளது. இதை தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் புரிந்துகொள்ள மறுக்கின்றன. ஆளும் திமுகவை பகைத்துக்கொள்ள வேண்டுமே என்பதற்காக, இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க மறுக்கின்றனர். எனவே பட்டியல் சமூகத்தினருக்கான அநீதியை களைய, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை பிற பட்டியல் சமூத்தினர் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் உள் இட ஒதுக்கீட்டை மட்டுமே எதிர்க்கிறோம்.
எனவே பட்டியல் சமூகத்தினருக்கான 18 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியருக்கு 3 சதவீதம் பிரித்து வழங்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு தனியாக 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக இதை அமல்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் முதலமைச்சராவதற்கு தகுதி உள்ளது. தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக தான் அரசியல் கட்சிகள் துவங்கப்படுகின்றன. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு முதல்வர் வேட்பாளர் தொல்.
திருமாவளவன் என்று கூறுவது நேருக்கு நேர் பொருத்தமில்லாதது. தவறான இடத்தில் இருந்து கொண்டு கனவு காண்பது தவறு. அது பகல் கனவாக போய்விடும். எனவே திருமாவளவன் முதல்வராக வேண்டும் என்றால், திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியேறுவது நல்லது என்றார்.