செல்லுலாய்டு காலத்தைத் தாண்டி பிரபலமடைந்து வரும் நாடகங்கள்
செல்லுலாய்டு காலத்தைத் தாண்டி பிரபலமடைந்து வரும் நாடகங்கள், ஆண்ட்ராய்டு காலத்திலும், கோவில் திருவிழாக்கள் மூலம் புத்துயிர் பெற்ற புராண நாடகங்களைப் பார்க்க குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை படுக்கை விரிப்புடன் தியேட்டர் முன் கூடும் வித்தியாசமான காட்சிகள்.
தமிழை இயல் இசை நாடகம் என்று மூன்றாக பிரித்துள்ளனர். கிமு 4300 ஆம் ஆண்டு வாழ்ந்த தொல்காப்பியர் தமிழகத்தின் நாடகக் கலை பற்றி தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறவைக்கூத்து துணங்கைகூத்து, ஆடிப் பாவை ஆகிய பெயர்களில் பண்டைய நாட்களில் நாடகங்கள் நடைபெற்றுள்ளன. மன்னர்கள் முன்னர் ஆடி காட்டும் வேத்தியல், பொதுமக்களுக்காக நடத்தப்படும் பொதுவியல் ஆகிய பிரிவுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழகத்தில் நாடகம் நடைபெற்று வந்தது.
18 – 19 ஆம் நூற்றாண்டுகளில் கோலோச்சிய நாடகங்கள் செல்லுலாயிட் காலமான பெரிய திரை அதைத்தொடர்ந்து சின்னத்திரை வரவுகளால் அதன் செல்வாக்கை மெல்ல மெல்ல இழந்து வந்தது இந்நிலையில் தற்போதைய ஆண்ட்ராய்டு காலத்தில் கோயில் திருவிழாக்கள் மட்டுமே நாடகக் கலையை வாழவைத்துக் கொண்டுள்ளது.
தை மாதம் துவங்கி வைகாசி மாதம் வரை சுமார் ஐந்து மாத காலங்கள் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நாடகங்கள் போட்டு அதன் பட்டாபிஷேக காட்சிகள் நடத்தும் பொழுது அந்த வருடம் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் காணப்படுகிறது.
இந்த ஒற்றை நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை அடங்கியுள்ளது. முன்னர் சரித்திர நாடகங்களுடன் பல்வேறு சமூகசீர்திருத்த நாடகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆலய விழாக்கள் என்பதால் வள்ளி திருமணம், ஹரிச்சந்திரா மயானம் காத்த மாமன்னன், ராமர் பட்டாபிஷேகம், உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நாடகங்கள் மட்டுமே அரங்கெட்டப்படுகின்றன ஏழு நாட்கள் வரை நடைபெற்று வந்த நாடகங்கள் தற்போது மூன்று நாட்கள் முதல் ஒரு நாள் மட்டுமே நடைபெறுகிறது. முன்பு போல் புரியாத பாடல் பாடாமல் வெகு ஜனங்களுக்கு புரியும் வகையில் எளிமையான உரைநடையில் நாடகங்கள் நடத்தப்படுகின்றன.
தற்போது விடிய விடிய நடைபெறும் நாடகங்களை பார்ப்பதற்கு 2k கிட்ஸ் முதல் 80 வயதான பெரியவர்கள் வரை விருப்பப்பட்டு குவிகின்றனர். கிராமங்களில் நாடகம் நடக்கும் இடத்திற்கு முன்பு சாக்கு பாய் இவற்றை விரித்து படுத்தபடி நாடகத்தை கண்டு ரசிக்கின்றனர். கும்பகோணம் நாடக நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் 1500 உறுப்பினர்கள் உள்ளனர் இவர்களுக்கு ஆலய விழாக்கள் மட்டுமே அடைக்கலமாக உள்ளது.
மேடைக்கு ராஜா என்றாலும் ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாள் எப்போது என்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு ஏற்ப அடவுகட்டி கிரீடம் வைத்து ராஜாக்களாய் நாடகத்தில் வலம் வரும் இவர்களது வாழ்க்கை மற்ற நாட்களில் வறுமையான ஒன்றாக உள்ளது. அனைத்து ஊர்களிலும் நாடகம் நடத்தினாலே எங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என்று நாடக நடிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.