போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் இப்படித்தான் சாக வேண்டும் வா போகலாம்; நெல்லையில் சாலை விபத்து குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நி்கழ்ச்சியில் விபத்தில் இறந்தவர்களை எமன் கையோடு அழைத்துச் செல்வது போன்று தத்ரூபமாக நாடகம் நடித்துக் காட்டிய மாணவர்கள்.
திருநெல்வேலி மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அப்போது சாலை விபத்து குறித்தும் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு குறித்தும் கல்லூரி மாணவர்கள் தத்துரூபமாக நாடகம் ஒன்றை அரங்கேற்றினர்.
அதாவது மாணவர்கள் மூன்று பேர் சாலை விதிகளை பின்பற்றாமல் ஒரே பைக்கில் அதிவேகத்தில் ஓட்டி சென்றதால் கார் ஒன்றில் மோதி விபத்தில் சிக்குவது போன்றும் தன் முன்பே நண்பர்கள் இருவர் உயிரிழந்ததை கண்டு உயிர் தப்பிய இளைஞர் கதறி அழுவது போன்றும் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
அதேபோல் மாணவர்கள் இறந்து கிடந்த இடத்திற்கு எமன் வேடத்தில் ஒருவர் வந்து “வா போகலாம்” என விண்ணுலகிற்கு இறந்தவர்களை அழைத்தார் அதற்கு உயிரிழந்த மாணவனின் ஆத்மா, நான் வரமாட்டேன் என்னை நம்பி என் குடும்பம் இருக்கிறது என் தங்கைக்கு திருமண நடத்தி வைக்க வேண்டும் என எமனிடம் கண்ணீர் விட்டு கதறுவது போன்ற காட்சியை தத்ரூபமாக நடித்து காட்டினார்.
அப்போது பேசிய எமன் குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இப்படித்தான் சாக வேண்டும் எனவே என்னோடு வா என்று இறந்தவர்களை கையோடு அழைத்துச் செல்வது போன்றும் மாணவர்கள் நடித்துக் காட்டினர் அந்த இடம் மாநகரின் முக்கிய பகுதி என்பதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வியப்போடு வேடிக்கை பார்த்தனர்.
சிலர் உண்மையாகவே விபத்து நடைபெற்றது போல பதறிய முகத்தோடு இந்த காட்சிகளை பார்த்தபடி கடந்து சென்றனர் மேலும் காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிணி கடைசி வரை இந்த நாடகத்தை ஆர்வமாக பார்த்தார்.