தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை முதல் மிதமான மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழை சம்பா, தாளடி பயிர்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக கல்லணைக்கால்வாயில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் காலை முதல் மிதமான மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மிக கனமழை அதாவது, 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்தார். மேலும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், 24 மணிநேரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் பாதிப்புகள் குறித்து தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
தஞ்சை மாநகர பகுதிகள் மற்றும் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆலக்குடி, வல்லம், கும்பகோணம், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, மேலக்காவேரி, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உட்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி நடந்து வருகிறது. சம்பா பயிர்கள் நன்கு வளர்ந்து 50 நாட்களை கடந்துள்ளது. தாளடி பயிர்கள் 20 நாட்கள் ஆன நிலையில் இந்த மிதமான மழை சாகுபடி பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் மழை தொடர்ந்து பெய்து தண்ணீர் தேங்கினால் பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.