விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு முதல்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கருத்து வேறுபாடுகள், வார்த்தை மோதல்களை தொடர்ந்து பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்திருந்தது.
இருப்பினும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் என்றும் மீண்டும் தேர்தலின்போது ஒன்று கூடுவார்கள் எனவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தது. ஆனால், இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
அதன்படி, மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என தேர்தல் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டிருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில், அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்த வருவதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்டுகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டவிரோதமாக பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனவே, இதுவரை வராத அமலாக்கத்துறை பாஜவுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சோதனையில் ஈடுபட்டுள்ளது.