மறைந்த கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி
திருநெல்வேலியில் மறைந்த அதிமுக நிர்வாகி கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி பாண்டியன் உடல்நிலை குறைவால் நேற்று உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாக இருந்தவர் குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்தார் இரண்டு முறை அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
எனவே அதிமுக திமுக ஆகிய இரு கட்சி நிர்வாகிகளிடம் நெருங்கி பழகக் கூடியவர் நெல்லையின் நெப்போலியன் என கருப்பசாமி பாண்டியனை கட்சி தொண்டர்கள் அழைப்பதுண்டு இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார் அதை தொடர்ந்து இன்று எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலி மாவட்டம் திருத்து பகுதியில் உள்ள கருப்பசாமி பாண்டியன் இல்லத்திற்கு நேரில் வந்து அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து கருப்பசாமி பாண்டியன் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது: போற்றுதலுக்கும் மிகுந்த மரியாதைக்கும் உரிய கருப்பசாமி பாண்டியன் தென் மாவட்டங்களில் முத்திரை பதித்தவர். எம்ஜிஆர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். கட்சியை உயிராக நேசித்தவர். எம்ஜிஆர் காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மாவட்ட செயலராக இருந்தவர். ஜெயலலிதா காலத்தில் துணை பொதுச்செயலராக திறம்பட பணியாற்றியவர்.
தென் மாவட்ட மக்களும் அதிமுகவினரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அதிமுகவின் தூணாக விளங்கியவர். நான் முதல்வராக பொறுப்பேற்ற போது என்னை நேரில் எங்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் உங்களுக்கு துணையாக நிற்பேன் எனக் கூறி எனக்கு வலிமை சேர்த்தவர். அவருடைய நினைவெல்லாம் கட்சிதான். அவருடைய இழப்பு அதிமுகவிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும், தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றார்.