செஞ்சியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி காதல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளரின் மைத்துனர் கைது- தலை மறைவு உள்ள அவரது மனைவிக்கு செஞ்சி போலீஸ் வலை வீச்சு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா தம்பதிகளுக்கு இரண்டு மகள் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் தியா(18) தொலைதூரக் கல்வியும், மகன் தீபக்(15) பத்தாம் வகுப்பும் மற்றும் இளைய மகள் பிரியங்கா(13) செஞ்சி காந்தி பஜார் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் வெங்கடேசபெருமாள் உயிரிழந்த நிலையில் நீலா கூலி வேலைக்கு சென்று தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதி சேர்ந்த தேனன் என்பவரின் மகன் சரவணன்(25) என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பிரியங்கா பள்ளிக்கு செல்லும் பொழுது அவரை வழிமறித்து நான் உன்னை காதலிப்பதாகவும் நீ என்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியதாகவும் இதனால் பயந்து போன பிரியங்கா தன் தாய் நீலாவிடம் வந்து வீட்டில் சொல்லி அழுதுள்ளார்.
இதனை அடுத்து நீலா சரவணின் தந்தையான தேனன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.
அப்போது என் கணவர் இறந்து ஓராண்டு கூட ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு பிரச்சனை என் குடும்பத்தில் உங்கள் மகனால் ஏற்படுகிறது இதற்கு மேல் உங்கள் பையன் ஏதாவது தொல்லை கொடுத்தால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என தன் வேதனையை வெளிப்படுத்தியதாகவும் அதற்கு சரவணன் குடும்பத்தினரும் என் மகனால் உங்கள் மகளுக்கு எவ்வித தொல்லையும் வராது என வாய்மொழியாக உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு பிரியங்கா மற்றும் அவரது அண்ணன் தீபக் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது பிரியங்காவை வழிமறித்த சரவணன் அவரது கையைப் பிடித்து இழுத்து நீ என்னை திருமணம் செய்தும் கொள்ள வேண்டும் இல்லையென்றால் உன்னை சும்மா விட மாட்டேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனை கண்ட தீபக் தன் தங்கை பிரியங்காவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று உள்ளார்.
வீட்டுக்கு சென்ற பிரியங்கா தன் தாயை கட்டி பிடித்து அழுதவாறு நடந்தவற்றை கூறியுள்ளார் .
அப்பொழுது நீலா தன் மகளிடம் பயப்படாதே இரவு ஆகிவிட்டது போய் படு காலையில் பேசிக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி வீட்டின் உள்ளே சென்று படு என்று கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ளே சென்று பார்க்கும் போது கை குழந்தைகள் தூங்குவதற்காக கட்டப்பட்டிருந்த புடவையில் பிரியங்கா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரியங்கா குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு இருசக்கர வாகனத்தில் சென்று செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியங்கா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து பிரியங்கா தாய் நீலா செஞ்சி காவல் நிலையத்தில் தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய அதே பகுதி சேர்ந்த சரவணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அக்கா சங்கீதா ஆகிய இருவர் மீதும் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தமிழக வெற்றி கழக விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் குண.சரவணன் என்பவரின் மைத்துணரும் நரசிங்கராயன்பேட்டை த.வெ.க பொருளாளருமான சரவணன் மற்றும் குண.சரவணன் மனைவிமான சங்கீதா ஆகியோர் மீது போக்சோ, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடித்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சங்கீதாவை போலீசார் தேடி வருகின்றனர்.