பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்
இம்மாத இறுதியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவிருந்த நிலையில் எலான் மஸ்க் இந்தியப் பயணத்தை ரத்து செய்ததற்கான காரணம் வெளியாகி இருக்கிறது..
டெஸ்லா நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் எலான் மஸ்க் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் பல நிறுவனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் தடம் பதித்திருக்கும் நிலையில் அதிக வரி உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக டெஸ்லா கார் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவது சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச அளவில் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் டெஸ்லாவின் நிறுவனத் தலைவரான எலான் மஸ்க் ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகல்ளில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதற்காக மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்வார் எனவும் தொழில்துறையினரிடையே பெருத்த எதிர்பார்ப்பு நிலவியது.
டெஸ்லா மட்டுமல்லாது அதிக வேகத்தில் இணைய சேவைகளை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்தியாவில் எலான் மாஸ்க் தொடங்குவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
“துரதிஷ்டவசமாக மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக இந்திய பயணத்தை தாமதப்படுத்த வேண்டியதாகி விட்டது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என எலான் பதிவிட்டுள்ளார். கடந்த முறை எக்ஸில் பதிவிட்ட போது பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என பதிவிட்டு இருந்த எலான் மஸ்க் தற்போது இந்திய பயணம் என குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தியாவில் பயணம் மேற்கொள்வதே சிறப்பானதாக இருக்கும் என எலான் கருதியாகவும், அதன் காரணமாகவே தற்போது பயணத்தை அவர் ஒத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.