நத்தத்தில் ஆதார் மையத்தில் ஆதார் பதிவு செய்ய அலைக்கழிப்பு ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், தொலைபேசி எண் பதிவு, புதுப்பித்தல், புதிய ஆதார் அட்டை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆதார் சேவைகளுக்காக கிராமப்பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் அன்றாடம் நத்தம் நகருக்கு வருகின்றனர்.
நத்தம் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், பிஎஸ்என்எல் தொலைபேசி அலுவலகம் என 4 இடங்களில் மட்டுமே ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் நாள் ஒன்றுக்கு 20 நபர்களுக்கு மட்டுமே திருத்தம், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது . இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தினமும் எண்ணற்ற பொதுமக்கள் புதுப்பித்தல், பிழைத்திருத்தம், புதிய ஆதார், தொலைபேசி எண் பதிவு செய்ய வருகின்றனர்.
ஒரு நாளைக்கு 20 டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. டோக்கன் வாங்குவதற்கு வரிசையில் பல மணி நேரம் காத்து கிடந்து அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில் நத்தம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் இ சேவை மையத்தில் ஒரு வாரமாக கணினி பிரச்சனை காரணமாக சேவை முடங்கியதாக கூறப்படுகிறது இதனால் காலை முதல் பெண்கள் கைக்குழந்தையுடன் ஆதார் மையம் முன்பாக காத்துக் கிடந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் துணை தாசில்தார் அண்ணாமலை மற்றும் நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை
பேச்சுவார்த்தையின் போது வரும் 29ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
சாலை மறியலால் திண்டுக்கல் நத்தம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.