ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சாவுக்கு வைகோ, ஸ்டாலின் தான் காரணம்
ஈரோடு எம்பி கணேச மூர்த்தி சாவுக்கு வைகோ, ஸ்டாலின் தான் காரணம் என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்த தமிழிசை அப்பகுதியில் உள்ள கடையொன்றில் மக்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தென் சென்னை தொகுதி எம்பிக்களாக இருந்த தமிழச்சி தங்கபாண்டியனும், ஜெயவர்தனும் வெள்ள பாதிப்புகளின் போது முழுமையாக களப்பணி ஆற்றவில்லை. நான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். இதனை மக்கள் புரிந்திருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களுக்கு கிடைக்காமல் இருட்டிப்பு செய்யப்படுகின்றன.
எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடைபெற்றால் மக்களுக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கும். தமிழகத்திலும் திராவிட கட்சிகளிடம் இருந்து தேசிய கட்சியான பாஜகவுக்கு மக்கள் மாறுகின்ற காலம் வந்துவிட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தேர்தலை சந்திக்க பணம் இல்லை என்று சொன்னதில் யதார்தமான உண்மை இருக்கிறது. தமிழகம் போன்ற இடங்களில் பணம் கொடுத்துதான் பல இடங்களில் வாக்குகளை வாங்கி கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு பணம் வேண்டும் என்பது உலகத்தில் உள்ள எல்லாருக்குமே தெரியும்.
ஈரோடு எம்பி கணேச மூர்த்தி ஒரு நல்ல அரசியல்வாதி. அவர் எப்படி இறந்தார். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஒரு மக்களவை உறுப்பினர் ஏன் சென்றார். அவர் தற்கொலை செய்திருப்பதற்கு முதல்வர் ஸ்டாலினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தான் பொறுப்பேற்க வேண்டும். வாரிசு அரசியல் என்பது மிகவும் பயங்கரமானது. ஒரு மக்களவை உறுப்பினரையே வாரிசு அரசியல் படுகொலை செய்திருக்கிறது. இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்