பாதாள சாக்கடை வடிவமைப்பை ஆய்வு செய்ய சுரத் நகரில் இருந்து நிபுணர்கள் வரவழிப்பு
புதுச்சேரி…விஷவாயு தாக்கிய பகுதியில் பாதாள சாக்கடை வடிவமைப்பை ஆய்வு செய்ய சுரத் நகரில் இருந்து நிபுணர்கள் வரவழிப்பு…துணைநிலை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி…
புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு காலத்து மேரி கட்டிடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மிஷின் வீதியில் உள்ள வ உ சி பள்ளி, கல்வே காலேஜ், பழைய துறைமுகத்தில் உள்ள கலாச்சார மையம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பழமை மிக்க கட்டடங்களை துணைநிலை ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். இதில் கலாச்சார மையத்தை பார்வையிட்ட போது உள்ளே மின்சார இணைப்பு எதுவும் கொடுக்காமல் இல்லாமல் இருண்டு கிடந்தது.
இதனைப் பார்த்த ஆளுநர் உடனடியாக அதிகாரிகளை அழைத்து அரசின் பணம் செலவிட்டு திட்டங்கள் செயல்படுத்தும் போது அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உடனே செய்து தர வேண்டும், அப்பொழுதுதான் செலவினங்கள் குறையும் அதனால் உடனடியாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன், கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மத்திய- மாநில அரசின் உதவியுடன் பழைய கட்டிடங்கள் அதன் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் கடற்கரை சாலை விளங்கும் என்றார்.
ரெட்டியார் பாளையம் புதுநகரில் விஷவாயு தாக்குதல் நடைபெற்ற தொடர்பாக உயர் அதிகாரி உடன் ஆலோசனை நடத்தினேன். அதில் சூரத்தில் இருந்தும் வளர்ந்த நகரங்களில் இருந்தும் நிபுணர்கள் வரவழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் கழிவு நீர் ஓட்டம் இல்லாத காரணத்தினால் கழிவுகள் தேங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் அவற்றை உறிஞ்சி எடுப்பதற்காக இயந்திரங்களை வரவழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் மக்கள் நலனை பேணி காப்பது என்பது தான் கூட்டத்தின் நோக்கம். புதுச்சேரி புதிய எழுச்சியை நோக்கி என்பது தான் எங்களது தலைப்பு.
விரைவில் புதுச்சேரி எழில்மிக்க நகரமாக மாற்றப்படும். வாழ்வதற்கு அடிப்படை வசதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் நேற்றைய கலந்துரையாடலின் நோக்கம் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பது குறித்து கேட்டதற்கு,குற்றச்சாட்டு வைப்பதுதான் எதிர்கட்சிகளின் வேலை. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முழுமையான செயல்பாட்டில் உள்ளது.
பழமை மாறாமல் கட்டிடங்களை மாற்றி அமைப்பதற்கு காலம் பிடிக்கும். இது எதிர்கட்சிகளுக்கும் தெரியும். குறைகூறுவது எதிர்கட்சிகளின் வேலை. ஆனால் அதையும் தாண்டி பழமை மாறாமல் கட்டிடங்களை கொண்டு வருவோம் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
பாதாள சாக்கடை திட்டத்தில் தவறு என கூறும் எதிர்க்கட்சிகள் அதற்கான ஆதரங்களை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் கூறினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமைச் செயலர் சரத் சவுகான், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீன தயாளன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.