நீர் வழி ஓடையைமண்ணைப் போட்டு மூடி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக விவசாயிகள் புகார்
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் இருந்து மேட்டு தொட்டியாங்குளம் கண்மாய்க்கு செல்லும் நீர் வழி ஓடையை ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தனி நபர்கள் ப்ளாட் போடுவதற்காக மண்ணைப் போட்டு மூடி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக விவசாயிகள் புகார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மேட்டுத்தொட்டியாங்குளம் கிராமத்தில் விவசாய பெருமக்கள் அதிக அளவு வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள கண்மாய்க்கு பாளையம்பட்டி தீர்த்தக்கரை பகுதியில் இருந்து நீர்வழி ஓடை வழியாக மழைக்காலங்களில் தண்ணீர் செல்கின்றது.
இந்த நீர்வழி ஓடை அரசு ஆவணங்களில் வண்டிப் பாதை என குறிப்பிடப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு சொந்தமான இந்த நீர் வழி ஓடை அருகே அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பாளையம்பட்டி பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் சில தனி நபர்கள் ப்ளாட் அமைத்துள்ளனர்.
இதற்காக அவ்வழியாக செல்லும் நீர் வழி ஓடையை ஆக்கிரமித்து மண்ணைப் போட்டு மூடி அதன் மேலே சாலை அமைத்துள்ளனர். இதை அறிந்த மேட்டுத்தொட்டியாங்குளம் கிராம விவசாயிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து உடனடியாக இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் வழி ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் ஏற்கனவே இருந்தபடி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அரைகுறையாக பணிகள் நடைபெறுவதாகவும் நீர் வழி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.