செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணுவை விடுதலை செய்யக்கோரி செய்யக்கோரி செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 22.5.2024 முதல் 30.5.2024 வரை சென்னையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாகவோ அல்லது ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பாகவோ அல்லது சாஸ்திரி பவன் முன்பாகவோ அல்லது தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகமான தலைமைச் செயலகம் முன்பாகவோ காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அதற்காக இன்று காலை திருச்சியில் இருந்து ரயில் மூலம் விவசாயிகள் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தும் விதமாக நேற்று இரவு அய்யாக்கண்ணு இல்லத்தில் அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருந்தனர். பின்னர் இன்று அதிகாலை அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை கைது செய்து உறையூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனை அறிந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் தனபால், ராமச்சந்திரன் ஆகியோர் திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை எதிரில் உள்ள வணிக வளாகத்தின் மாடியில் அமைந்திருக்கும் செல்போன் டவர் மீது ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யாக்கண்ணுவை விடுதலை செய்யும் வரை செல்போன் டவரில் இருந்து இறங்க மாட்டோம் எனக் கூறி செல்போன் டவர் மீது அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம் விவசாயிகள் பிடி கொடுக்காமல் மாநில தலைவர் அய்யாக்கண்ணுவை விடுதலை செய்தால் மட்டுமே கீழே இறங்கி வருவோம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.