in

பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் குழந்தையை ரூ 1.50 லட்சத்திற்கு விற்ற பெண் சித்த மருத்துவர் கைது

பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் குழந்தையை ரூ 1.50 லட்சத்திற்கு விற்ற பெண் சித்த மருத்துவர் கைது

 

சிதம்பரம் அருகே பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் குழந்தையை ரூ 1.50 லட்சத்திற்கு விற்ற பெண் சித்த மருத்துவர் கைது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் குழந்தையை மீட்டு எடுத்துச் சென்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள சொக்கநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் பிறந்து 5 நாளே ஆன குழந்தை ஒன்று இருந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் கடலூரில் உள்ள சைல்ட் லைன் அமைப்பிற்கு புகார் செய்தனர்.

பின்னர் அவர்கள் வந்து விசாரித்தபோது அந்த குழந்தையை ரூ 1.50 லட்சம் கொடுத்து அந்தப் பெண்ணின் உறவினர் வாங்கி கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து குழந்தையை மீட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் அதை கடலூர் எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் களப்பணியாளர் சித்ராவதி சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் குழந்தையை விற்ற கடலூர் மாவட்டம் வடலூர் புதுத்தெருவைச் சேர்ந்த சித்த மருத்துவரான சத்யபிரியா(67) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து பல்வேறு மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சித்த மருத்துவர் சத்யபிரியா தவறான உறவில் பிறக்கும் குழந்தைகளை இதுபோன்று விற்பனை செய்ததும், அதுபோன்ற ஒரு குழந்தையைதான் சொக்கநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ 1.50 லட்சத்திற்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What do you think?

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு

தூய மரியன்னை பேராளயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ்காக சிறப்பு இரங்கல்