புதுச்சேரியில் இரண்டாவது நாளாக இரவில் கனமழை நகரம் முழுவதும் மழை நீரில் ஸ்தம்பித்தது
புதுச்சேரியில் இரண்டாவது நாளாக இரவில் கனமழை மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் நகரம் முழுவதும் மழை நீரில் ஸ்தம்பித்தது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் 5 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
இடியுடன் கனமழை பெய்தது. இந்த இரவு நேர மழை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் படி இரண்டாவது நாளாக இன்று இரவு 8.30 மணி முதல் மிக கனமழை பெய்தது.
காலாப்பட்டு, லாஸ்பேட்டை, திலாசுபேட்டை, உப்பளம், தவளக்குப்பம், திருக்கனூர், பாகூர் என புதுச்சேரி முழுவதும் பரவலாக கன மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக காமராஜர் சாலை, 100 அடி சாலை, இ.சி.ஆர் சாலை, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், அண்ணா சாலை, புஸ்ஸி வீதி, போன்ற முக்கிய நகர பகுதியில் உள்ள வீதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், அப்பகுதியில் வாசிக்கும் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். மழை நின்றாலும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் இப்பகுதியில் நீர் வடியும் நிலை உள்ளது…