முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த வேணுகோபால் உடல் நலக்குறைவால் காலமானார்
திருவண்ணாமலை, திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதிகளில் தொடர்ந்து ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.வேணுகோபால் உடல் நலக்குறைவால் காலமானார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த கிராமமான காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இவர் திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதிகளில் தொடர்ந்து 1996, 1998,1999, 2004 ஆகிய ஆண்டுகளில் திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தொடர்ந்து திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியாக 2009ஆம் ஆண்டு மறு சீரமைக்கப்பட்ட பொழுது
2009 ஆம் ஆண்டு இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்று திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மாலை அவரது இறுதி ஊர்வலம் சொந்த கிராமத்தில் இருந்து நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.