15 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றி பேருந்து சேவையை தொடக்கம்
15 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றி பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ,சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து சாந்தப்பாடி கோவிலூர் வழியாக திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை வரையிலான வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் 15 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் கிராமங்கள் தோறும் சாலை வசதி ஏற்படுத்திட வேண்டும், விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் சிரமமின்றி நகர்பகுதிக்கு சென்று வர கூடுதல் பேருந்து வசதி மற்றும் புதிய பேருந்து சேவைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவிலூர் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அரவக்குறிச்சியில் இருந்து சாந்தப்பாடி கோவிலூர் வழியாக இடையகோட்டை வரை தினசரி இரண்டு முறை சென்று வரும் வகையில் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல், திமுக சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் சட்டமன்ற உறுப்பினரும் பேருந்தில் பயணித்தார்.
கரூர் மாவட்டம் கோவிலூர் சாந்தப்பாடி கிராமத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து வெடிக்காரன் பட்டி, இணங்கனூர், தண்ணீர் பந்தல், அரவக்குறிச்சி வழியாக திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டையை சென்றடையும் வகையில் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பேருந்து சேவை இயக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.