விநாயகர் சிலைகள் அதிரடி படை போலீசார் பாதுகாப்புடன் ராட்சத கிரேன் மூலம் தாமரை குளத்தில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்ட 150 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அதிரடி படை போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக வந்து ராட்சத கிரேன் மூலம் தாமரை குளத்தில் கரைப்பு..
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடெங்கும் விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி கடந்த 07 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சிறுவர்கள் இளைஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பகுதிகளில் 3 அடி முதல் 20 அடி வரை பல்வேறு விதவிதமான விநாயகரை வைத்து மாலை நேரங்களில் கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபட்டு வந்தனர்.
மூன்றாம் நாளான இன்று திருவண்ணாமலை நகரில் கடந்த மூன்று தினங்களாக வைக்கப்பட்டிருந்த சிவன் பார்வதியோடு விநாயகர், உடுக்கை விநாயகர், சிங்கமுக விநாயகர், கஜ விநாயகர், என பல்வேறு விதவிதமான 150 க்கும் மேற்பட்ட விநாயகரை மத்திய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்தி சிலை, திருவூடல் வீதி, காமராஜர் சிலை வழியாக ஊர்வலமாக மேளதாளங்களுடன் கொண்டு சென்று இராட்சத கிரேன் உதவியுடன் தாமரை குளத்தில் கரைத்து வழிபட்டனர்.
குறிப்பாக இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.