நாமக்கல் மாவட்டத்தில்,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருக்கும் விநாயகர் சிலைகள்,இன்று (09.09.2024) முதல், காவிரி ஆற்றுப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில், 717 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா பக்தி சிரத்தையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், ஜேடர்பாளையம், இறையமங்கலம், பரமத்தி-வேலூர் உள்ளிட்ட 17 இடங்களில் உள்ள காவிரி ஆற்றங்கரை ஓரங்களில், இன்று (09.09.2024) முதல் சிலைகள் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதற்காக மாவட்டக் காவல், வருவாய் உள்ளிட்ட துறைகள் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து மோகனூர் காவிரி ஆற்றில் பகுதிகளைச் சேர்ந்த விநாயகர் சிலைகள் பக்தர்களால் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு, கரைக்கப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்பட்ட காவிரி கரையோரங்களின் 17 பகுதிகளில், தொடர்ந்து 3 நாள்களுக்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்து வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஏற்றிக் கொண்டு, உற்சாகத்துடன் காவிரி கரைகளுக்குச் சென்று சிலைகளை கரைத்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் (11.09.2024) வரை விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்.