இணைய வழியில் கடன் பெற்றவரின் புகைப்படத்தை சித்தரித்து நண்பர்களுக்கு அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்
புதுச்சேரி…இணைய வழியில் கடன் பெற்றவரின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து நண்பர்களுக்கு அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்… வங்கி கணக்குகள் மூலம் ரூ.321 கோடி மோசடி…கேரளாவை சேர்ந்த லாரி ஓட்டுனர் கைது …
நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (40) கடந்த 2023ம் ஆண்டு ஆன்லைன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றார். அந்த கடனை வட்டியுடன் சேர்த்து செலுத்தினார். இந்த நிலையில் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து அதனை பேஸ்புக், வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள நண்பர்கள் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மர்ம நபர்கள் கேட்டது போல பல்வேறு தவணைகளாக ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் செலுத்தினார். மேலும் அந்த கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதால் ஆண்ட்ரூஸ் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக வலைதளத்தில் இருந்த புகைப்படங்களை அழித்தனர். இதனை தொடந்து ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து அவர் அனுப்பிய பணம் எங்கு சென்றது என்று விசாரணை நடத்தினர்.
அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது ஷபி( 37) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே சைபர் கிரைம் போலீசார் கேரளா சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 10-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் அங்கு லாரி டிரைவராக இருந்தார். தொடர்ந்து அவர் தனது நண்பர் உதவியுடன் இது போன்ற மோசடி கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது தொடர்ந்து போலீசார் அவரது வங்கி கணக்கை சோதனை செய்த போது அதில் ரூ.10 கோடியே 65 லட்சம் இருப்பது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கை உடனடியாக போலீசார் முடக்கினர். பின்னர் அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.இந்த மோசடியில் மேலும் 13 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் ஒரு நிறுவனம் போல செயல்பட்டு வருகின்றனர். அதற்கு குஜராத்தை சேர்ந்த சித்தான் முகேஷ் என்பவர் தலைவராக உள்ளார். அவரை அமலாக்கத்துறை போலீசார் மற்றொரு வழக்கில் தற்போது கைது செய்து குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த முஜிப் என்பவரை தமிழக போலீசார் போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கும்பல் டெல்லி, சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து ஒரு வங்கி கணக்கிற்கு பணம் வந்த உடன் அதனை உடனடியாக அடுத்தடுத்து வங்கி கணக்குகளுக்கு மாற்றுகின்றனர். அதன்படி 8 வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.
9-வதாக அந்த பணம் கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை பொதுமக்களை ஏமாற்றி 8 வங்கி கணக்குகள் மூலம் ரூ.321 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. அந்த வங்கி கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சித்தான் முகேஷ், முகேஷ் ஆகிய 2 பேரையும் அங்குள்ள சிறையில் இருந்து கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் 11 பேரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் முதுநிலை காவல்காணிப்பாளர் நாரா. சைதன்யா கூறுகையில், ‘ஆன்லைன் கடன் செயலிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். கடந்த ஆண்டுகளில் மட்டும் புதுச்சேரியில் இதே போல் 336 புகார்கள் வந்துள்ளன. பொதுமக்கள் சுமார் ரூ.33 லட்சம் பணத்தை இழந்துள்ளனர். எனவே காவல்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட ஆன்லைன் கடன் செயலிகளை முடக்கி வைத்துள்ளோம். இருப்பினும் சைபர் குற்றவாளிகள் நாள்தோறும் புதிதாக செயலிகளை உருவாக்குகின்றனர். எனவே பொதுமக்கள் இந்த செயலிகளை நம்பி கடன் பெற்று ஏமாற வேண்டாம்.
இந்த வழக்கில் கூட கடன் பெற்றவர்களை மிரட்டியவர்கள் கம்போடியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழில் பேசி மிரட்டியது தெரியவந்துள்ளது. எனவே இது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் புதுச்சேரியில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் என்னென்ன வேலை செய்கின்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை 38 பேரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெறும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது மிரட்டல் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்’. என்றார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது ஷபியை போலீசார் அழைத்து வந்த போது அவர் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் க்கு வரும் நடிகரைப் போல கையை அசைத்துக் கொண்டு… நான் அவன் இல்லை…வேற ஆளு வேற ஆளு என …நான் அவள் நிலை திரைப்பட பாணியில் என்று கூறி சென்றார். புகைப்படக்காரர்கள் படம் எடுத்த போது போட்டோ சூட்டுக்கு வந்த நடிகரை போல மாறி மாறி போஸ் கொடுத்தார்.