சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல்
சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல். கேட்பாரற்று கிடந்த சாக்குப்பையில் இருந்த 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. சிதம்பரம் ரயில்வே போலீசார் கஞ்சாவை கைப்பற்றி விசாரணை.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சார்லப்பள்ளி என்ற இடத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று இரவு சிதம்பரம் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் உத்தரவின்படி அங்கு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், மணிகண்டன், ஜீவகன், காவலர்கள் ஞானசபை, சபரி ஆகியோர் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டி ஒன்றில் ஒரு சாக்கு முட்டை கேட்பாரற்று கிடந்தது. இது யாருடையது என போலீசார் கேட்டபோதும் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை.
பின்னர் சாக்கு மூட்டையை இறக்கிய போலீசார் அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது. தலா 2 கிலோ வீதம் 5 பொட்டலங்களாக கஞ்சா கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.