நெல்கொள்முதல் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை காங்கிரஸ் கட்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்டனம்
அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு 4 மாதகாலமாக சம்பளம் வழங்காத நிலை: திருவாரூரில் காங்கிரஸ் கட்சி சார்புடைய தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்டனம்…
அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பணிபுரிந்துவரும் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு 4 மாதகால சம்பளம் வழங்கப்படாதது, கடந்த 40 ஆண்டுகாலமாக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை திடீரென நிறுத்தியது ஆகியவற்றிக்கு காங்கிரஸ் கட்சி சார்புடைய தொழிற்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதுகுறித்த கோரிக்கை அடங்கிய மனுவினையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவாரூர் மாவட்ட முதுநிலை மண்டல மேலாளரிடம் அளித்துள்ளது.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம். இம்மாவட்டத்தில் நெல்சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நலன்கருதி விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை உடனுக்கு உடன் கொள்முதல் செய்து கட்டுப்படியான விலையினை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழக அரசு நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்கொள்முதல் செய்துவருகிறது.
இவ்வாறு அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்கு உடன் அரசு குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது அரசின் விதிமுறை.
ஆனால் நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை அரசு குடோன்களுக்கு கொண்டு செல்லாமல் மாத கணக்கில் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கின்றன. இத்தகைய தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள் மழையிலும், வெய்யிலும் கிடந்து வீணாகி அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஆனால் இத்தகைய இழப்பினை அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது சுமத்தி அவர்கள்மீது இலட்சக்கணக்கில் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது
இத்தகைய அபராதத்தை கட்டாவிடில் அவர்களுக்கு பணிவழங்க மறுக்கப்படுகிறது – இதுதவிர அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு வேண்டுமென்றே கடந்த 4 மாதகாலமாக சம்பளம் வழங்காமல் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்புடைய தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இளவரி தலைமையில் ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவாரூர் மாவட்ட முதுநிலை மண்டல மேலாளரை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில் திமுக அரசை கண்டித்து அரசு நேரடி நெல்கொள்முதல் ஊழியர்களை ஒன்றுதிரட்டி வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் மாநில பொதுச்செயலாளர் இளவரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.