விருதுநகரில் ராணுவ வீரர் வீட்டில் தங்க நகை திருட்டு
விருதுநகரில் ராணுவ வீரர் வீட்டில் சுமார் ரூபாய் ஆறு லட்சம் மதிப்பிலான 10.5 சவரன் தங்க நகை திருட்டு-போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (50) இவரது மகன் விஜயகுமார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
விஜயகுமாரின் தாயார் சாந்தி தனியாக வசித்து வந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சாந்தியின் தாயார் லட்சுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் உள்ளதால் அவரை பார்க்க சென்ற நிலையில் இன்று சாந்தியின் மகள் கவிதா தனது தாயாரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10.5 சவரன் தங்க நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து சாந்தி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வீட்டில் தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.