நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நல்ல திட்டங்கள் வரும்- வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு
வாரிசு ஆட்சி அகற்றப்பட வேண்டும் பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர், நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நல்ல திட்டங்கள் வரும் என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களும், ஐ.ஜே.கே தொண்டர்களும், பாரிவேந்தருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய பாரிவேந்தர், ஒரு கல்வியாளர் என்ற முறையில் MP தொகுதி நிதியில் தாம் பள்ளிகளுக்கு அதிக செலவு செய்துள்ளதாகவும்,
2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி ஆயிரத்து 200 மாணவர்களை தேர்ந்தெடுத்து, பட்டதாரிகளாக உருவாக்கி இருப்பதாகவும் கூறினார்.
பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகு இந்தியாவை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், திமுக எம்பிகள் மோடியை திட்டுவது, பாராளுமன்றத்தை முடக்குவது போன்ற வேலைகளை செய்து தங்களை ஹீரோக்களாக காட்டி கொள்வதாக சாடினார்.