பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக கட்டணமில்லாமல் அரசு நகர பேருந்து
பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்டணமில்லாமல் அரசு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சண்முக நதியில் இருந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு நகர பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இலவசமாக இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை பழனி திருக்கோவில் நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது.
இலவச அரசு பேருந்துகள் இயக்கத்தை பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இன்று முதல் 3 நாட்களுக்கு இலவசமாக பேருந்து இயக்கப்படுவது போலவே இன்று முதல் மூன்று நாட்களுக்கு பழனி மலைக்கோவிலில் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருக்கோவில் நிர்வாகிகள் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.