சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவில் பங்கேற்க ஆளுநர் வருகை. எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 75 பேர் கைது. சுவாமி சகஜானந்தாவிற்கு காவிச்சாயம் பூசும் முயற்சியை கண்டிப்பதாக பேட்டி
சிதம்பரத்தில் கல்வி சேவை ஆற்றிய சுவாமி சகஜானந்தாவின் 135 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார்.
சிதம்பரம் நந்தனார் மடத்தில் உள்ள சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியிலும், அதைத்தொடர்ந்து அண்ணாமலைநகரில் உள்ள பொன்மணி அரங்கத்தில் நடைபெறும் பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பிறகு அரசு நந்தனார் ஆண்கள் பள்ளி விடுதிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி மதிய உணவு உண்கிறார்.
ஆளுநர் ரவியின் இந்த வருகை நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சுவாமி சகஜானந்தாவின் அடையாளத்தை அபகரிக்க நினைக்கும் கவர்னரை கண்டித்து சிதம்பரம் மேலவீதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் இந்தியா கூட்டணியிலுள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 பேர் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் ஆளுநருக்கு எதிரான பதாகைகளை ஏந்தி ஆளுநரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் ஒரு பேருந்தில் அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்,
ஜாதி, மத, சமயத்தை எதிர்த்த பெரியோர்களை ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் அமைப்புகள் கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது. திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது, வள்ளலாரை சனாதனவாதி என்று கூறுவது போன்றவை நடைபெற்று இருக்கிறது. இதுபோல் கல்வி சேவையாற்றிய சுவாமி சகஜானந்தாவையும் காவியாக்கும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு இருக்கிறார்.
அதைக் கண்டித்து இன்று சிதம்பரத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி இருக்கிறோம். சகஜானந்தாவுக்கு காவிச்சாயம் பூசுவதை அனுமதிக்க மாட்டோம். அதற்காகத்தான் இந்த போராட்டம் என கூறினார்கள்