ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு ஒரு குழந்தை பலியான நிலையில் சுகாதாரப் பணிகள் தீவிரம்….
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மேலக்கோபாலபுரம் ஊராட்சி பகுதியில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் இந்த பகுதியில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு காய்ச்சல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.
4 வயது முதல் 15 வயதிற்க்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்னர். கடந்த 17ஆம் தேதி ஆனந்தவள்ளி (8 ) என்ற சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சிறுமி உயிர் இழந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் உறவினர்கள் விசாரித்த போது குழந்தைக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கும் தான் தாங்கள் சிகிச்சை அளித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிகிச்சை பெற்று குணமடைந்த அனைத்து குழந்தைகளும் தற்போது அவர்களது வீடுகளில் பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகின்றனர். மேலும் சிலர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான மேலக்கோபாலபுரம் கிராமத்தில் மாவட்ட சுகாதார அதிகாரி தலைமையில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் சென்று அபைட் மருந்து தெளிப்பது, காய்ச்சல் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பது, காலை – மாலை இருவேளைகளிலும் கொசு மருந்து அடிப்பது, கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரின் கலந்து அந்நீரை விநியோகிப்பது.
மேலும் கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கு படித்து வரும் குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் அமைத்து காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து உயர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் காய்ச்சல் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.